அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

பரபரக்கும் தேர்தள் களம்:

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த முறை பெற்றது போல எளிதான வெற்றியை பாஜகவால் பெற முடியாது என கருதப்படுகிறது.

எனவே, வட மாநிலங்களில் பெறும் தோல்வியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெறுவது மூலம் ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கூட்டணியை கொண்டுள்ளது.

கமலின் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு:

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனது கூட்டணியை மேலும் பலப்படுத்து முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் கமல் இணைந்தால், அவர் தனிச் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாரா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.