ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்:

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மாநில முதலமைச்சர் ஒருவருக்கு சிறையில் உள்ள கைதிகள் விடுத்துள்ள கொலை மிரட்டல் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பேதம் கூறுகையில், "உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்த இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைக்குள் செல்லிடப்பேசிகள் கடத்தப்பட்டதை தடுக்க தவறியதற்காக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, சிறையில் செல்போன்களை பறிமுதல் செய்ய விரைவில் தேடுதல் வேட்டை நடத்தப்படும்" என்றார்.

புயலை கிளப்பிய சிறை கைதிகள்:

இது தொடர்பாக அதிகாரிகள் பேசுகையில், "போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மொபைல் போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, ராஜஸ்தான் முதலமைச்சர் சர்மாவை கொலை செய்வதாக மிரட்டினார்கள். ஜெய்ப்பூர் சிறையில் இருந்து சிறைக் கைதிகள் கொலை மிரட்டல் விடுத்தது காவல்துறை நடத்திய விசாரணையில் பின்னர் தெரிய வந்தது" என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மாவுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மூத்த தலைவர்களான வசுந்தரா ராஜே, அர்ஜூன் மேவால், தியாகுமாரி, ஜோஷி, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட அனைவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பஜன்லால் சர்மா, தேசிய பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைக்கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – 206 அடி உயரம், 400 டன் எடை, ரூ.404 கோடி மதிப்பீடு