நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக, அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததும் , ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை மற்றும் பென்ஷன் வழங்காததை கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாமக, புரட்சி பாரதம், விசிக, பாஜக ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது: கடந்த முறை போராட்டம் நடைபெற்ற பொழுது பொங்கல் பண்டிகை முன்னிட்டு நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். எங்களின் கோரிக்கையை நியாயமானது என்று நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது. அதன் பிறகு நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது.

கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை கூறினால் அதை மேல் இடத்தில் கூறுகிறார்கள். ஒரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால், ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதே போன்று அமைச்சரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது கிடையாது. நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் கலந்து கொள்ளாததால், முடிவுகள் எட்டப்படுவது சந்தேகம். நாங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை கேட்கிறோம் நாங்கள் எதுவும் கூடுதலாக கேட்கவில்லை. புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கக் கூறுகிறோம். இதை கூட இந்த அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. நாளை தினம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்