"போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

காசாவில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்:

கடந்த 1948ஆம் ஆண்டு, இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை வெடித்த பிறகு, காசா பகுதி அகதிகள் முகாமாக மாற்றப்பட்டது. வெறும் 1.4 சதுர கிலோமீட்டரே ஆன காசா பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அசுத்தமான குடிநீர், மின்வெட்டு, அலைமோதும் கூட்டம் என காசா மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேல் நடத்தி வரும் போர் காசாவை மேலும் நிலைகுலைய வைத்துள்ளது. இதற்கிடையே, வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் போரின் காரணமாக உணவு தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இதனால், அகதிகள் முகாமில் இருந்த நபர் ஒருவர், தனது குடும்பத்திற்கு உணவை வழங்க சொந்த குதிரையை அடித்து கொன்றுள்ளார்.

இதுகுறித்து அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு ஜிப்ரில் கூறுகையில், "குழந்தைகளுக்கு உணவளிக்க குதிரைகளை கொல்வதை தவிர வேறு வழியில்லை. பசி எங்களை கொல்கிறது" என்றார். இஸ்ரேல் போர் தொடங்கியதை அடுத்து, பெய்ட் ஹனுன் பகுதியில் இருந்து 60 வயதான ஜிப்ரில், தனது குடும்பத்துடன் அகதிகள் முகாமிக்கு சென்றுள்ளார்.

எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை:

காசாவில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கடுமையான வறுமை நிலவி வருகிறது. தற்போது, போர் தொடர்ந்து வருவதால் காசாவுக்கு உணவு போன்ற அடிப்படை தேவைகளை எடுத்து செல்ல முடியாமல் ஐநா போன்ற சர்வசேத அமைப்புகள் திணறி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அவநம்பிக்கை நிலவி வருவதாகவும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் இருக்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஜபாலியாவிலிருந்து ஏழு கிலோமீட்டர்கள் (வெறும் நான்கு மைல்கள்) தொலைவில் உள்ள காசா நகரில் உள்ள மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரண்டு மாத குழந்தை இறந்தது.

இதுகுறித்து யுனிசெப் கூறுகையில், "உணவு பற்றாக்குறை, அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் காசாவில் குழந்தை இறப்புகளை அதிகப்படுத்தலாம்" என எச்சரித்துள்ளது.

Source link