உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி இணையதளங்களான பைனன்ஸ் (Binance), குகோயின் (Kucoin), ஓகேஎக்ஸ் (OKX) உள்ளிட்டவை இந்தியாவில் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் செயலியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் இணையதளங்கள் நேற்று முடக்கப்பட்டன.
பணமோசடி சட்டங்களை மீறி செயல்பட்டதாக கூறி, பைனன்ஸ், குகாயின், ஓகேஎக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இணையதளங்களை தவிர, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfinex ஆகிய இணையதளங்களுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளூர் வரி சட்டங்களை மீறியதாகவும் பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக இயங்கியதாகவும் அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இணையதளங்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.