பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடை.. ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்


கடந்த சில ஆண்டுகளாகவே, டிஜிட்டல் இணைய சேவைகள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம், ஜிபே உள்ளிட்ட சேவைகளைதான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். நட்சத்திர விடுதிகள் தொடங்கி சிறிய கடைகள் வரை, இவைதான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
பேடிஎம்-ஐ பயன்படுத்த மக்களுக்கு தடையா?
இச்சூழலில், ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  இதற்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் விதிமீறல் நடந்துள்ளதால் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளிலும் Paytm Payments வங்கி டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படாது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
வாலட் உள்பட எந்த பண பரிமாற்றங்களும் அனுமதிக்கப்படாது. ஆனால், பேடிஎம் கணக்குகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை திரும்ப எடுக்கவும் பயன்படுத்தவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35A மற்றும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி Paytm Payments வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது.
ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியையும் பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29 அல்லது அதற்கு முன் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகளும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும், மேலும் எந்த பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link