<p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் கேன்சரை உருவாக்க கூடிய விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை வாங்கி சோதனை செய்தனர். அதில் ரோடமின் பி (RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.</p>
<p style="text-align: justify;">குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.</p>
<p style="text-align: justify;">புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது தெரிவததை தொடர்ந்து அவர்களுடைய விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்வந்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.</p>