பாஜகவுக்கு இடம் இருக்கா? இல்லையா? ட்விஸ்ட் கொடுத்த சந்திரபாபு நாயுடு.. ஆந்திர அரசியலில் பரபர

அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா சந்திரபாபு நாயுடு?

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. விரைவில், பாஜக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், தென் மாநிலங்களிலும் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இப்படியிருக்க, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம், ஜன சேனா வெளியிட்டுள்ளது.

94 தொகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியும் 24 தொகுதிகளுக்கு ஜன சேனா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல, 25 மக்களவை தொகுதிகளில் மூன்றில் ஜன சேனா களம் இறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தருவதற்காக மீதமுள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திர அரசியலில் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்:

இதுகுறித்து ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில், "கூட்டணியில் பாஜக இணையும்போது அதுதொடர்பான முடிவுகள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்" என்றார்.

ஆந்திராவில் ஒரு கோடி மக்களிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது தெலுங்கு தேசம் கட்சி. அதுமட்டும் இன்றி, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "118 வேட்பாளர்களைக் கொண்ட இந்த அற்புதமான வேட்பாளர் பட்டியல் ஆந்திரப் பிரதேசத்தின் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் புது முகங்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்டவல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு, "தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி தேர்தல் போருக்கு தயாராக உள்ளது. இந்த கூட்டணி மாநிலத்தின் எதிர்காலத்திற்கானது. ஆந்திராவின் பிரகாசமான எதிர்காலத்திற்கானது" என்றார்.

இதையும் படிக்க: PM Modi : 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தல்.. தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்.. நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Source link