படிப்பதற்காக கனடா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம்தான்.. இத படிங்க!

கல்வி கற்கவும் வேலைவாய்ப்புக்காகவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை சம்பவம் இந்திய, கனட நாடுகளின் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – கனட நாடுகளுக்கு இடையே பிரச்னை:

கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கூறியது.

இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, கனடா நாட்டை சேர்ந்த 41 தூதரக அதிகாரிகளை அவர்களின் நாட்டுக்கே இந்தியா திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில், கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்துள்ளதாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேபோல, கனடா நாட்டுடன் பிரச்னை நிலவி வருவதால் விசாவுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்:

இதுகுறித்து கனடா குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகையில், "படிப்பதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பதற்றத்தின் காரணமாக மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறையும். இந்தியாவுடனான எங்கள் உறவு, இந்தியாவில் இருந்து நிறைய விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் திறனை பாதியாகக் குறைத்துவிட்டது" என்றார்.

இந்தியாவில் இருந்த கனட தூதரக அதிகாரிகளே இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பத்தை பரிசீலித்து அவர்களுக்கு விசாக்களை வழங்கி வந்தனர். அவர்களில் 41 பேரை இந்தியா வெளியேற்றியுள்ளதால் அதிக அளவிலான மாணவர்களுக்கு விசாக்களை வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கனடாவுக்கு பதிலாக வேறு நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டை ஒப்பிடுகையில் நான்காவது காலாண்டில் இந்திய மாணவர்களுக்கு கனடா விசா அளிப்பது 86 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 1,08,940 பேருக்கு படிப்பதற்கான விசா அளிக்கப்பட்ட நிலையில், நான்காவது காலாண்டில் 14,910 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.

Source link