“நீங்க 40 இடத்துக்கு மேல ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறேன்” மீண்டும் காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி!


நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. 1ஆம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது.
காங்கிரஸை பங்கமாக கலாய்த்த பிரதமர் மோடி:
மக்களவையை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையில் நடந்து வரும் விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியுள்ளார். காங்கிரஸ் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிரதமர் மோடி, “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு  எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்று மிகுந்த கவனத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மக்களவையில் காணாமல் போன பொழுதுபோக்கை அவர் மீட்டு கொண்டு வந்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸால் 40 தொகுதிகளை தாண்ட முடியாது என்ற சவால் மேற்கு வங்கத்தில் (மம்தா) இருந்து உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் 40 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
“ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த கட்சி கூட்டாட்சி பற்றி பாடம் எடுக்கிறது”
தொடர்ந்து பேசிய அவர், “அதிகாரப் பேராசையில் ஜனநாயகத்தை வெளிப்படையாகவே கழுத்தை நெரித்த காங்கிரஸ், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இரவோடு இரவாகக் கலைத்த காங்கிரஸ், அரசியலமைப்புச் சட்டத்தை சிறையில் அடைத்த காங்கிரஸ், பத்திரிகைகளுக்குப் முடக்க நினைத்த காங்கிரஸுக்கு இப்போது புது பழக்கம் வந்து விட்டது. நாட்டை உடைக்க முயற்சி செய்கிறது. இது போதாதென்று இப்போது வடக்கையும் தெற்கையும் உடைப்பதாக பேசுகிறார்கள். இந்த காங்கிரஸ்தான் எங்களுக்கு ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி பற்றி பாடம் எடுக்கிறது.
காங்கிரஸின் 10 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. காங்கிரஸ் அரசின் கொள்கை முடக்கத்திற்கு பெயர் பெற்றது. மறுபுறம், நமது 10 ஆண்டுகளில், இந்தியா முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. எங்கள் 10 ஆண்டுகள் பெரிய, தீர்க்கமான முடிவுகளுக்காக நினைவுகூரப்படும்.
இந்த அவையில் ஆங்கிலேயர்கள் நினைவுகூரப்பட்டனர். ராஜா-மஹாராஜாக்களுக்கு அந்த நேரத்தில் ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஆங்கிலேயர்களால் ஈர்க்கப்பட்டவர் யார்? சுதந்திரத்திற்குப் பிறகும், காலனித்துவ மனநிலையை ஊக்குவித்தவர் யார்? நீங்கள் ஆங்கிலேயர்களால் ஈர்க்கப்படவில்லை என்றால், அவர்களால் உருவாக்கப்பட்ட ஐபிசியை நீங்கள் ஏன் மாற்றவில்லை?
அவர்களால் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டங்களை ஏன் தொடர அனுமதித்தீர்கள்? பத்தாண்டுகளுக்குப் பிறகும் ஏன் விஐபி கலாச்சாரம் தொடர்ந்தது? முன்பு எல்லாம், இந்தியாவின் பட்ஜெட் மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஏன் என்றால், இங்கிலாந்தில் அந்த நேரத்தில்தான் பிரிட்டன் நாடாளுமன்றம் கூடும். ஆங்கிலேயர்களால் ஈர்க்கப்பட்டவர் யார்? ராஜ்பாத்தை கர்தவ்ய பாதையாக மாற்ற மோடி வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என்றார்.
 

மேலும் காண

Source link