அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது.

சர்ச்சையை கிளப்பும் ஞானவாபி மசூதி விவகாரம்:

இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது.

கடந்த வாரம், ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியின் மூடப்பட்ட அடித்தள பகுதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு:

இந்த நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி, இந்த வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வாரணாசி நீதிமன்றம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்கும் ஜனவரி 31ஆம் தேதி உத்தரவை எதிர்த்து மட்டுமே இஸ்லாமியர் தரப்பு வழக்கு தொடர்ந்தனர்.

எனவே, ஜனவரி 17ஆம் தேதிக்கு எதிராகவும் மனுதாக்கல் செய்ய சொல்லி இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது அலகாபாத் உயர் நீதிமன்றம். பிப்ரவரி 6ஆம் தேதிக்குள், இது தொடர்பான மனுவை தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.