சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை 28 ஆம் தேதி ஒத்திவைத்ததுடன் மார்ச் 6ம் தேதி வரை அமுதாவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவரது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும் ரோஸ்லினுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள ஞானாம்பாளுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 1 லட்சம் சதுரடி நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி அமுதா, அவரது கணவரும் மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவர் மனோகரன், மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 14 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரோஸ்லின் தொடர்ந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீஸார் கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் முதல் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மனோகரனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் முதல் குற்றவாளியாக உள்ள அமுதா தலைமறைவாகியிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அமுதாவின் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரத்து செய்ய வேண்டுமென கோரினர். அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து அமுதாவை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அமுதா சார்பில் அணுகியதால் உச்ச நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரணை நீதி மன்றமான திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் அமுதா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, அவர் நீதிபதி பாலமுருகன் முன்பு கடந்த வாரம் ஆஜரானார். இதனையடுத்து அமுதாவை 23.02.2024 வரை சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இந்த நிலையில் ரோஸ்லின் தொடர்ந்த நில மோசடி வழக்கில் சேரன் குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா அவரது கணவர் மனோகரன் உள்ளிட்ட 13 நபர்கள் இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றம் முன்பு ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை அமுதாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அமுதா இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 நபர்களில் 13 பேர் இன்று ஆஜரான நிலையில் ராஜேந்திரன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து அமுதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுவின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.