சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்றிறவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்சாய் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தானது நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ விபத்தில் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் எத்தனை பேர் குழந்தைகள் என்று தெரியவில்லை. உள்ளூர் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.” என்று தெரிவித்தது.

சீனாவில் பள்ளி சார்ந்த விஷயங்களில் அரசாங்கம் கவன குறைவாக உள்ளது என்றும், பாதுகாப்புத் தரங்கள் குறைவாக இருப்பதே விபத்திற்கு காரணம் என்றும் நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் சீனாவில் ஏற்பட்ட விபத்துகள்:

கடந்த நவம்பர் மாதம் வடக்கு சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 12க்கு அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம், சீன நாட்டின் வடகிழக்கில் இருந்த பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு, வடமேற்கு சீனாவில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில், பெய்ஜிங்கில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.