சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த வாரத்தில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

சர்ச்சையில் சிக்கும் பாஜக வேட்பாளர்கள்:

அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், பல சர்ச்சைக்குரிய சிட்டிங் எம்பிக்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும் லக்னோ தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமேதி தொகுதியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ள பல வேட்பாளர்கள் சர்ச்சையில் சிக்கி போட்டியிலிருந்து பின்வாங்குவது தொடர் கதையாகி வருகிறது. மேற்குவங்கம் அசன்சோல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகரும் பாடகருமான பவன் சிங் போட்டியிலிருந்து பின்வாங்கிய நிலையில், உத்தர பிரதேசம் பாராபங்கி தொகுதி பாஜக வேட்பாளரான உபேந்திர சிங் ராவத்தும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.

ஆபாச வீடியோவால் எழுந்த சர்ச்சை:

பாராபங்கி தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ள உபேந்திர சிங் ராவத்துக்கு வரும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டு பெண் ஒருவருடன் அவர் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

மேலும், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ பொய்யானது என்றும் தனது இமேஜை காலி செய்யும் நோக்கில் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருவதாகவும் உபேந்திர சிங் ராவத் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடுகையில், "டீப்ஃபேக் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட என்னுடைய எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, நான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பாஜக தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்" என்றார்.

மேற்குவங்கத்தில் வங்க பெண்களை அவமதிக்கும் வகையில் பாடல்களை பாடி வெளியிட்டதாக பவன் சிங் மீது குற்றச்சாட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பவன் சிங் தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Source link