சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!


கனட நாட்டு விதிகளை மீறி பார்ன்ஹப் இணையதளத்தின் (வயது வந்தோருக்கான இணையதளம்) உரிமையாளர் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க புகைப்படத்தில் இருப்பவர்களின் ஒப்புதல் இன்றி, அவை பகிரப்பட்டது கனட நாட்டு விதிகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்:
வயது வந்தோருக்கான (18+) பொழுதுபோக்கு குழுமமாக இருப்பது அய்லோ ஹோல்டிங்ஸ். பன்னாட்டு நிறுவனமான இது கனடாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் பார்ன்ஹப் இணையதளம், உலகளவில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.
இப்படியிருக்க, இந்த இணையதளத்தில் தனது ஒப்புதல் இன்றி அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருப்பதை கண்டு பெண் ஒருவர் அதிர்ச்சியாகியுள்ளார்.
பின்னர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டது தனது முன்னாள் காதலன் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பார்ன்ஹப் இணையதளத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். கனட நாட்டு தனியுரிமை ஆணையர் பிலிப் டுஃப்ரெஸ்னே, இந்த புகாரை விசாரித்து வருகிறார்.
இளம் பெண் அளித்த பரபரப்பு புகார்:
இதுகுறித்து பிலிப் டுஃப்ரெஸ்னே கூறுகையில், “அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் வருவோரின் ஒப்புதல் இன்றி அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படாமல் இருப்பதை அய்லோ நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
பார்ன்ஹப் மற்றும் பிற அய்லோ தளங்களில் போதிய தனியுரிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றி அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அய்லோ நிறுவனத்திடம் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை நீக்கும்படி கேட்கும் நபர்களின் நேரம்தான் வீணாகிறது. திறமையற்ற செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். கனட நாட்டு தனியுரிமை விதிகளுடன் இணங்குவதற்கு அவர்களுக்கு பல பரிந்துரைகளை வழங்கினோம். ஆனால், அவை எதனையும் நிறுவனம் ஏற்கவில்லை” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அய்லோ நிறுவனம், “பெண் புகார் அளிக்க காரணமான சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதன்பிறகு, இணையதளத்தில் இருந்து சட்டவிரோத வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற நிறுவனம் பல முயற்சிகளை எடுத்தது.
தனியுரிமை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகளை கணிசமாக நிவர்த்தி செய்யும் நடைமுறைகளை நாங்கள் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.
பாலியல் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண அய்லோ நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திற்கு 1.8 மில்லியன் டாலர்களை செலுத்த கடந்த டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டது.
இதையும் படிக்க: “அவருக்கு மனைவியோட பேரே நியாபகம் இருக்காது” டிரம்பை பொளந்து கட்டிய அமெரிக்க அதிபர் பைடன்!

மேலும் காண

Source link