//குடும்ப தகராறில் அம்மிக்கலை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசிப்பவர் ஜமால் பாஷா வயது (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி பி, இவரது மூன்றாவது மகள் மனிஷா வயது (28). இவருக்கும் ஆரணி நகரம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாத்திர வியாபாரி மன்சூர் அலிகான் வயது (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் மீது அதிகமான பாசம் வைத்திருந்த மனிஷா அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தாயை கவனித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே குடும்பம் நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மனிஷா தாய் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். பிறகு தாய் சைதாணி பிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக சென்றதாகவும் இதனால் தாயை காண மனிஷா சென்றுள்ளார். 

 
 மாமனாரை கொலை செய்த மருமகன்
இதை அறிந்த மன்சூர் அலிகான்  ஒரு கட்டத்தில் மனைவியை பார்த்து, ”நீ உன் தந்தையிடம் தகாத உறவு வைத்துள்ளாய் அதனால் தான் அடிக்கடி அவரை பார்க்கத் தாய் வீட்டுக்கு செல்கிறாய்” என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மனிஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.இதை அறிந்த மனிஷாவின் சகோதரர்கள் நேற்று மன்சூர் அலிகான் வீட்டுக்குச் சென்று சமாதானம் பேசியுள்ளனர். இதற்கிடையில் 12 மணி அளவில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மன்சூர் அலிகான் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவி மனிஷாவை  அழைத்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும்  இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அலிகான் வீட்டில் இருந்து அம்மிக்கலை எடுத்து அங்கு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் ஜமால் பாஷா தலைமீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து  சென்றுவிட்டார்.

 
கைது செய்யப்பட்ட மருமகன் 
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜமால் பாஷாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ஆரணி நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சுப்பிரமணி, துணை ஆய்வாளர் சந்திரரேசன் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜமால் பாஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மன்சூர் அலிகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் படிக்க; Watch Video: அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்!

Source link