கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல் – என்ன பிரச்சினை?

வேலைவாய்ப்புக்காகவும், கல்வி கற்கவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை சம்பவம் இந்திய – கனடா உறவில் பெரும் பிரச்னையை கிளப்பியது.

இந்திய – கனட உறவில் விரிசல்:

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதன் காரணமாக, கனடா நாட்டை சேர்ந்த 41 தூதரக அதிகாரிகளை அவர்களின் நாட்டுக்கே இந்தியா திருப்பி அனுப்பியது.

இதனால், கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்ததாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். கனடா நாட்டுடன் பிரச்னை நிலவி வருவதால் விசாவுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீட்டு வசதியில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும் குற்றம் செய்யும் நபர்களுக்கு விசா வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா விளக்கம் அளித்துள்ளது.

இந்திய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா:

இதுகுறித்து கனடா குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டின் விளைவாக 2024இல் படிப்பதற்காக தரப்படும் மாணவர்களின் விசாக்கள் 35 சதவீதம் குறைக்கப்படும். 2024 ஆம் ஆண்டு, 3 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கல்வி கற்க விசாக்கள் வழங்கப்பட்டன.

இந்த கட்டுப்பாடுகள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும். 2025 இல் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதியில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். கனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை பராமரிக்கவும் 2024 இல் கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் வளர்ச்சி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

கனடாவில் நிரந்தர குடியிரிமை பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாகாண அரசுகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில், அந்நாட்டு மத்திய அரசு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, கனடாவுக்கு பதிலாக வேறு நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டை ஒப்பிடுகையில் நான்காவது காலாண்டில் இந்திய மாணவர்களுக்கு கனடா விசா அளிப்பது 86 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 1,08,940 பேருக்கு படிப்பதற்கான விசா அளிக்கப்பட்ட நிலையில், நான்காவது காலாண்டில் 14,910 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.

Source link