கட்சி சின்னத்தை மீட்க சீமான் கையில் எடுத்த ஆயுதம்.. என்ன செய்யப்போகிறார்?

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.

நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவா?

ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படியிருக்க, நாம் தமிழருக்கு கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.

இச்சூழலில், நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சட்ட போராட்டத்தை தொடங்கும் சீமான்?

கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்தது.

இந்த நிலையில், தங்களின் கட்சி சின்னத்தை மீட்க நாம் தமிழர் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழரின் இந்த முயற்சி தோல்வி அடைந்தால், அடுத்ததாக சட்ட போராட்டத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற்றதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு, 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.

Source link