கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிரடி நடவடிக்கை:

அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி விதி கொண்டு வந்தது.

ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த விதி பின்பற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து கடைகளும் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், இந்த விதியை பின்பற்ற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள வணிக கட்டிடங்களில் பெயர் பலகையின் மேற்பகுதியில் 60% கன்னட வார்த்தைகள் இடம்பெறுவதை கட்டாயமாக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அறக்கட்டளைகள், ஆலோசனை மையங்கள், மருத்துவமனைகள், ஆய்வு கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றின் பெயர்பலகைகளில் 60% கன்னட வார்த்தைகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெயர் பலகைகளில் கன்னட மொழி கட்டாயம்:

அதுமட்டும் இன்றி, மாநில அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களிலும் பெயர்பலகைகள் 60 சதவிகிதம் கன்னடத்தில் இடம்பெற வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பெயர்பலகைகளும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்புகள், விளம்பரங்கள், விண்ணப்பப் படிவங்கள், டிஜிட்டல் படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் மாநிலத்தில் வெளியிடுவதற்காக அரசு அல்லது உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவிப்புகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், ஃப்ளெக்ஸ், மின்னணுக் காட்சிப் பலகைகள், தகவல்கள், அறிவிப்புகள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவி பெறும் மற்றும் உதவிபெறாத நிறுவனங்கள் நடத்தும் பிற நிகழ்ச்சிகள் கன்னடத்தில் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா ரக்ஷனா வேதிகே (KRV) என்ற கன்னட அமைப்புக்கள் பெயர் பலகைகளில் கன்னடத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள பல கடைகளில் இருந்து ஆங்கில பெயர் பலகைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Sonia Gandhi : காங்கிரஸ் கட்சியின் கோட்டைக்கு டாடா.. மாநிலங்களவை தேர்தலுக்கு தயாராகும் சோனியா காந்தி!