கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளாக உலக பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்தது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று, அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் என உலக பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டது. கடந்தாண்டுதான், நிலைமை ஓரளவுக்கு சீரானது.

உக்ரைன் – ரஷிய நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்த போதிலும், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தொடங்கிய போதிலும் பொருளாதாரத்தில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எப்படி இருக்கப்போகிறது உலக பொருளாதாரம்?

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணித்து சர்வதேச நிதியம் (IMF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இந்தாண்டு, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை 3.1 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது சர்வதேச நிதியம். முன்னேறிய நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் அதன் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டெழுந்திருப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என IMF விளக்கம் அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 2.9ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள உலக பொருளாதார அவுட்லுக் (WEO) அறிக்கையில், 0.2 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 3.1 சதவிகிதம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கௌரிஞ்சாஸ், "ஒரே நேரத்தில் குறைந்த பணவீக்கமும், அதிக வளர்ச்சியும் பதிவாகியுள்ளது" என்றார்.

இந்தியாவின் நிலை என்ன?

சீனா, ரஷியா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளை குறிப்பிட்டு பேசிய அவர், "இது அமெரிக்காவின் கதை மட்டுமல்ல. கடந்த ஆண்டு மற்றும் 2024இல் உலகின் பல, பல பகுதிகளில் பொருளாதாரம் மீண்டெழுந்தது.

வளர்ச்சி ஏற்பட்டாலும், உயர்ந்த வட்டி விகிதங்களின் தொடர்ச்சியான தாக்கங்கள், கொரோனா காரணமாக அரசாங்கம் அறிவித்த ஆதரவு திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பது, தொடர்ந்து குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக உலகளாவிய வளர்ச்சி அதன் சமீபத்திய வரலாற்று சராசரியான 3.8 சதவீதத்திற்கும் கீழே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜி7 நாடுகளில், ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது. இது தற்போதைய சவால்களை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் ஜப்பான் மற்றும் கனடா ஆகியவை சற்று சிறப்பாக செயலாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு, வளர்ந்த நாடுகளின் பணவீக்கம் 2.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபரில் கணிக்கப்பட்டதை விட 0.4 சதவீத புள்ளிகள் குறைவு. வளர்ந்து வரும் நாடுகளின் பணவீக்கம், 0.3 சதவீத புள்ளிகள் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜென்டினாவில் நடந்து வரும் பிரச்சனையே இந்த அதிகரிப்பின் பெரும்பகுதிக்கு காரணம். அங்கு நடந்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நுகர்வோர் விலை உயர்வு கடந்த ஆண்டு 200 சதவீதத்தை தாண்டியது" என்றார்.

அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் 2.1 சதவீதம் வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 இல் கணிக்கப்பட்ட 2.5 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.6 சதவீத வளர்ச்சியை எட்டும் பாதையில் உள்ளது. கடந்த ஆண்டு, 5.2 சதவீத வளர்ச்சியை எட்டியது.