"இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் சிக்கியது அணு ஆயுத தளவாடமா?

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தளவாடம், இன்னும் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், 2 மேம்பட்ட கணினி எண் கட்டுப்பாடு இயந்திரங்கள் இருந்துள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கும் ராணுவ பயன்பாட்டுக்கும் இதை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

தளவாடத்தை இந்தியா பறிமுதல் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், "இயந்திரத்தின் விவரக்குறிப்பில் அது வர்த்தக பயன்பாட்டுக்கானது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்பத்தகாத தகவல்களின் அடிப்படையில் சுதந்திரமான வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிப்பது அரசின் தன்னிச்சையான செயல்களில் உள்ள ஆபத்துகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

பாகிஸ்தான் விளக்கம்:

பாகிஸ்தானில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்களை விநியோகம் செய்யும் கராச்சியை சேர்ந்த வணிக நிறுவனம் கடைசல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்பித்து, வங்கிகள் மூலம் வெளிப்படையான பண பரிமாற்றம் நடந்துள்ளது.

நியாயமுற்ற முறையில் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்களை மீட்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ஊடகங்கள் எப்போதும் போல் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை இத்தாலியில் உள்ள ஜிகேடி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், 9ஆம் தேதி, சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா சரக்கு கப்பலில், அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. காஸ்மோஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு தளவாடம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம், தெர்மோ எலக்ட்ரிக் கருவிகளை ஜிகேடி நிறுவனத்திடமிருந்து காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம் மூலம் வாங்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போதில் இருந்தே, காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம், தங்களின் சந்தேக வளையத்தில் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அனுப்பப்பட்ட தெர்மோ எலக்ட்ரிக் கருவிகளை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link