பாகிஸ்தானின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்தது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. 17 இடங்களில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் வெற்றிபெற்றது. மற்ற கட்சிகள் 17 இடங்களில் வெற்றிபெற்றனர். வேட்பாளர் இறந்ததால் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தபடவில்லை.

புதிய அரசை அமைக்க 133 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் முயற்சித்தன. குறிப்பாக, பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்:

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியும் ஔரங்கசீப் வெளியிட்ட பதிவில், "நவாஸ் ஷெரீப், தனது இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீப்பை (72) பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

தனது மகள் மரியம் நவாஸ் (50) பஞ்சாப் மாகாண முதலமைச்சராக நியமனம் செய்துள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு (வரவிருக்கும் அரசாங்கத்தை அமைப்பதில்) ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற முடிவுகளின் மூலம் பாகிஸ்தான் நெருக்கடிகளில் இருந்து வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார். ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் இம்ரான் கானுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அவரின் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.