ராணுவத்தை ரொமான்டிசைஸ் செய்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதிகளை வேட்டையாடும் ஹீரோக்கள், ராணுவ அதிகாரிகளாக வந்து மிரட்டுவர். அந்த திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வெற்றியையும் பெற்றன. ஷாருக்கான், சல்மான் கான், தொடங்கி கமல், விஜய் என பலர் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்கள் பெரும் விமர்சினத்திற்கும் உள்ளாகியுள்ளன.

குறிப்பாக, மக்களின் தரப்பில் கதையை கூறாமல், ராணுவத்தின் தரப்பில் கதை சொல்லப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல், விஜய் வரிசையில் தமிழ் சினிமாவில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடக்க போகிறார் சிவகார்த்திகேயன்.

அதுவும், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரியாக வலம் வரப்போகிறார். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு என்றால் என்ன? அது எதற்காக தொடங்கப்பட்டது? அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? ராணுவ அதிகாரி வேடத்தை முன்னணி நடிகர்கள் தேர்வு செய்வது ஏன்? போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடை தேடுகிறது.

ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு என்றால் என்ன?

எல்லை பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காகவும் ஆயுத புரட்சியை எதிர்கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட பிரிவுதான் ராஷ்டிரிய ரைபிள்ஸ். 1990களின் தொடக்கத்தில், எல்லைகளில் போதுமான படைப்பிரிவு இல்லை என கருதப்பட்டதால் ராணுவம் போன்று அல்லாமல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக பிரத்யேகமான பிரிவு ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டது. அப்போது, கொந்தளிப்பான சூழலில் இருந்து வந்த பஞ்சாப்பிலும், பயங்கரவாத தாக்குதலால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஜம்மு காஷ்மீரிலும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் களத்தில் இறக்கப்பட்டது.

இரண்டு இடங்களிலும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. குறிப்பாக, காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கங்களை அடக்க ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு பெரும் பங்காற்றின. தொடக்கத்தில் 5,000 வீரர்களுடன் இயங்கி வந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் தற்போது 80,000 வீரர்கள் உள்ளனர்.

இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகளான எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியமர்த்தப்படுவர்.

ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அங்கு ராணுவத்தை குவித்து வருகிறது மத்திய அரசு. ஆனால், எல்லா பிரச்னைக்கும் பயங்கரவாதமே காரணம் இல்லை என வாதம் முன்வைக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனக் கூறி, அப்பாவி மக்களை ராணுவம் துன்புறுத்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

அந்த வகையில்தான், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மீதும் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முகமது சபீர், ஷபீர் அகமது மற்றும் ஷோகத் ஹுசைன் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இதற்கு மத்தியில், ராணுவ முகாமில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு வீரர்கள் என நம்பப்படும் சில நபர்கள், மிளகாய் தூள், தூவுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ, பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு உள்பட இந்திய ராணுவம் மீது இம்மாதிரியான எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

ராணுவ அதிகாரி வேடத்தை முன்னணி நடிகர்கள் தேர்வு செய்வது ஏன்?

காஷ்மீர் என்று சொன்னாலே, பயங்கரவாதம் என்பது நினைவுக்கு வரும் அளவுக்கு நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி வரும் மக்களை, தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இம்மாதிரியான சூழலில், ராணுவ அதிகாரி வேடத்தை மற்றொரு முன்னணி நடிகர் தேர்வு செய்துள்ளார்.

காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு வகை என்றால், பாதுகாப்பான தென்னிந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக நிறுவ முயற்சிக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு வகை. இப்படியிருக்க, ராணுவ அதிகாரியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் முன்னணி நடிகர்கள் நடிப்பது தொடர் கதையாகி வருகிறது. தேசியவாதம் என்ற போர்வையில் பெரும்பான்மையினரை கவர நடிகர்கள் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களாகவே இவை உள்ளன.