இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி 25ம் தேதி உடல்நலக்குறைவால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தார். அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது மிகவும் தாமதமாகவே கண்டறியப்பட்டது. நேச்சுரோபதி சிகிச்சைக்காக ஸ்ரீலங்கா சென்ற பவதாரிணி அங்கே சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரே உயிரிழந்தார். அவரின் வயது 47. தனித்துவமான குரலால் அனைவரையும் மயங்க வைத்த பாடகியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாவதாரிணியின் நினைவலைகள் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த நிலையில் அவரின் சகோதரரான யுவன் ஷங்கர் ராஜா, அக்காவை பற்றி மனம் திறந்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
பவதாரிணி பற்றி யுவன் :
தற்போது ஸ்ரீலங்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கே பத்திரிகையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்து இருந்தார். அப்போது பவதாரிணி பற்றி பேசுகையில் “அக்கா என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். எனக்கு ஐந்து, ஆறு வயசு இருக்கும் போது என்னோட கையை பிடிச்சு பியானோவில் வைச்சு உன்னாலயும் வாசிக்க முடியும் என சொல்லி வாசிக்க வைத்தாள். அவ மியூசிக் கிளாஸ் போகும்போது என்னையும் கூட கூட்டிட்டு போவா. என்னோட இந்த இசைப் பயணத்தில் மட்டும் அல்ல என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கா மிகவும் முக்கியமானவர். நிச்சயம் இந்த இசை நிகழ்ச்சியில் அவரின் பாடல்களும் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
முறையான இசை :
இசைஞானி என இளையராஜா போற்றப்படுகிறார். அவரின் வாரிசுகள் பவதாரிணி மற்றும் கார்த்திக் ராஜா இருவருமே இசையை முறையாக கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் யுவன் ஷங்கர் ராஜா முறையாக இசையை கற்றவர் இல்லை. சுத்தமாக இசை தெரியாத யுவனுக்கு முதன் முதலில் இசையை கற்றுக் கொடுத்தது அக்கா பவதாரிணி தான்.
மீண்டும் விஜய் – யுவன் காம்போ :
தற்போது யுவன் ஷங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்திற்கு இசையமைக்கிறார். அதனால் இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். விஜய் – யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் கடைசியாக வெளியான படம் ‘புதிய கீதை’. அப்படத்திற்கு பிறகு விஜய் படத்தில் யுவன் இசையமைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “GOAT திரைப்படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இப்படத்திற்காக மிகவும் ஆவலாக இருக்கிறேன். இனிமேல் பேச்சு கிடையாது வீச்சு தான்” எனத் தெரிவித்துத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
மேலும் காண