வணங்கான் (Vanangaan) படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
பாலா இயக்கத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து, பின் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவர் விலக, நடிகர் அருண் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான்.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு கையில் பகுத்தறிவு பேசிய பெரியார், மற்றொரு கையில் கடவுள் பிள்ளையார் என நாயகன் அருண் விஜய் வைத்திருக்கும் வகையிலான போஸ்டர் ஆதரவு, விமர்சனங்கள் இரண்டையும் இணையத்தில் பெற்றது. மேலும், சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையை பாலா இப்படத்தில் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நாளை வணங்கான் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. இறுதியாக பாலாவின் இயக்கத்தில் வெளியான வர்மா திரைப்படம் பல சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி பெரிய அளவில் எடுபடாத நிலையில், வணங்கான் திரைப்படத்தினை பாலாவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்நிலையில், நாளை டீசர் வெளியாவதற்கு முன்னதாக தற்போது அருண் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அருண் விஜய்யின் கூர்மையான பார்வையுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் நாலை மாலை 5 மணிக்கு வணங்கான் டீசர் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போஸ்டரில் அருண் விஜய் பார்ப்பதற்கு அப்படியே ரோலக்ஸ் சூர்யா போல் தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் களமாடி வருகின்றனர்.
மேலும் சூர்யா நடிக்க இருந்து அருண் விஜய் நடித்து முடித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் அவரைப் போலவே கனக்கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண