thug life starring kamal haasan first schedule wrapped up in Chennai Abhirami Joju George Maniratnam


மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் இருவரும் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’.
கமல்ஹாசனின் 234ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி,  அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்களில் ஜோஜூ ஜார்ஜ், அபிராமி தவிர மற்ற அனைவரும் ஏற்கெனவெ மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கின்றன.
முன்னதாக இப்படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ படக்குழுவால் பகிரப்பட்டு வைரலான நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது. கமல் மாறுபட்ட தோற்றத்தில் யகூசா எனும் வீரராகவும், நிஞ்சா போன்ற பாத்திரத்திலும் இப்படத்தில் தோன்றுவதால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 5 நாள்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், கமல்ஹாசன், நடிகை அபிராமி, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யா, சைபீரியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், எஞ்சியுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பினை கமல் முடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

மேலும் காண

Source link