தமிழ் சினிமாவில் ஜனவரி மாதத்தில் அதிகப்பட்சமாக வரும் வாரம் 7 படங்கள் ரிலீசாகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பமே அமோகம்

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. ரூ.300 கோடி, ரூ.400 கோடி என வசூல் வரை மட்டுமே சென்று கொண்டிருந்த திரையுலகில் பாலிவுட்டுக்கு இணையாக ரூ.600 கோடி வசூல் செய்து தமிழ்ப்படங்கள் சாதனைப் படைத்தது. இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் 2024 ஆம் ஆண்டு தொடங்கி விட்டது. ஜனவரி மாதம் முடியவுள்ள நிலையில் முதல் வாரம் 4 படங்களும், 2வது வாரமான பொங்கலுக்கு 4 படங்களும் வெளியாகின.

கடந்த வாரம் எந்த படமும் ரிலீசாகாத நிலையில் ஜனவரி மாதத்தின் கடைசி வாரமான நாளை 4 படங்களும் மற்றும் நாளை மறுநாள் 3 படங்களும் ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 7 படங்கள் திரைக்கு வருகிறது.

ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாகும் படங்கள்

சிங்கப்பூர் சலூன்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. முடி திருத்தும் தொழிலாளியாக இதில் நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் தான் சிங்கப்பூர் சலூன் படத்தை எடுத்துள்ளார். இதில் மீனாட்சி சௌத்ரி,கிஷன் தாஸ், சின்னி ஜெயந்த், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் கௌரவ தோற்றத்திலும் வருகின்றனர்.

ப்ளூ ஸ்டார்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்,சாந்தனு, ப்ரித்வி, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் உள்ள அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

தூக்குத்துரை

ட்ரிப் படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, இனியா, மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் ‘தூக்குதுரை’. மனோஜ் இசையமைத்துள்ள இப்படம் பேய் படம் என்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

முடக்கறுத்தான்

பிரபல சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் “முடக்கறுத்தான்”. இந்த படத்தில் கே.ஆர்.விஜயா, அறிமுக நடிகையாக ரேவதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிற்பி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த படம் குழந்தை கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின படங்கள்

லோக்கல் சரக்கு

கே.வினோத்குமார் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் – யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “லோக்கல் சரக்கு”. இப்படத்தில் உபாசனா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, வையாபுரி என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

நியதி

நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள படம் ‘நியதி’. இந்த படத்தில் அஞ்சனா பாபு, தேனி முருகன், கோவிந்த் மூர்த்தி, விஜய் ரணதீரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜேக் வாரியர் இசையும், பிரபு கண்ணன் ஒளிப்பதிவாளர் பணியும் மேற்கொள்ள இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாகிறது.

இதுதவிர த.நா., என்ற தமிழ் படமும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன், இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படமும் இந்த வார வெளியீடாக திரைக்கு வர உள்ளது.