நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படம் சூர்யா 43. இந்தப் படத்தில் இரண்டாம் முறையாக தனது ஆஸ்தான இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைகோர்க்கிறார்.
பாலிவுட்டில் சூர்யா
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குவதாக சென்ற ஆண்டே தகவல் வெளியானது. ரத்த சரித்திரம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் சூர்யா நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைப்பதாகவும், நடிகை தமன்னாவின் காதலரும் பிரபல பாலிவுட் நடிகருமான விஜய் வர்மா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் இப்படத்துக்கு கர்ணா எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தினை பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கர்ணா திரைப்படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா ஜோடியாகும் ஜான்வி!
அதன்படி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷனுமான நடிகை ஜான்வி கபூர் தற்போது கர்ணா படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தன் அம்மாவைப் போல் ஜான்வியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து சக்கைபோடு போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்தி படத்தில் ஜான்வி சூர்யாவுக்கு ஜோடியாக உள்ளதாக வந்துள்ள தகவல் ரசிகர்களை சற்று அதிருப்திக்குள்ளாக்கியே உள்ளது.
எனினும் சூர்யாவின் 44ஆவது படமான கர்ணா இந்தியில் மட்டுமே உருவாகப் போகிறதா, அல்லது பான் இந்திய படமாக உருவாக உள்ளதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படப் பணிகள் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஸ்ரீதேவி மகள்!
இத்தகவலை தயாரிப்பாளரும் ஜான்வியின் தந்தையுமான போனி கபூர் தன் சமீபத்திய நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜான்வி, அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம் சரணுடனும் நடிக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமா தாண்டி தன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் இணையதள சென்சேஷனாக கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மனதைக் கொள்ளை அடித்து வருகிறார் ஜான்வி. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக தான் நடித்து வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், ஜான்வி தன் அம்மா ஸ்ரீதேவியைப் போலவே பல மொழிகளில் நிச்சயம் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து ஜான்வி நடித்து வருகிறார் என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
போனி கபூர் பகிர்ந்துள்ள இத்தகவலால் சூர்யா மற்றும் ஜான்வி கபூர் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் காண