நடிகனாக வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்றும் தனது தந்தையை மனதில் வைத்து எடுத்த படம்தான் ஸ்டார் என்று இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

ஸ்டார் பட இயக்குநர் இளன்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இயக்குநர் இளன் தனது சினிமா பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் இளனின் அப்பா

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்கு அப்பாவாக நடித்தவர்தான் இயக்குநர் இளனின் தந்தை . இவரது பெயர் பாண்டியன். ராமராஜ் நடித்த தேடிவந்த ராசா படத்தில் கவுண்டமனிக்கு லஞ்சம் கொடுக்கவரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். தான் சினிமாவில் ஆர்வம் காட்ட தனது தந்தை தான் தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார் என்று இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.

அப்பாதான் சினிமாவில் ஆர்வம் வர காரணம்

"பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசை . சினிமாவில் வாய்ப்பு கிடை க்காத காரணத்தினால் ஃபோட்டோகிராஃபராக இருந்தார். அவ்வப்போது சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு காட்சியில் ஆயிரம் பேரில் ஒருவராக ஒரு ஓரமாக நின்றாலும் அதைப் பற்றி ரொம்ப ஆர்வமாக என்னிடம் வந்து சொல்வார். அதை எல்லாம் கேட்டு தான் எனக்கு சினிமாவின் மேல் ஆர்வம் வந்தது.

நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே குறும்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டேன். அதில் என் அப்பாவை நடிக்க வைத்தேன். அதற்கு பிறகு என் அப்பா நடித்த குறும்படம் ஒன்று தேசிய விருது வென்றது. அதைப் பார்த்த அட்லீ அவரை ராஜா ராணி படத்தில் நடிக்க அழைத்தார். அந்த படம் என் அப்பாவுக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்தது. என் அப்பா ஃபோட்டோகிராபராக இருந்தபோது வாழ்க்கையில் ஒருமுறையாவது நிலாவுக்குச் சென்று ஃபோடடோ எடுத்துவிட வேண்டும் என்று ஒருமுறை விளையாட்டாக சொன்னார்.

அதை கேட்ட எனக்கு எப்படியாவது நிலாவுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதனால் தான் ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங்க் எடுத்தேன் . கல்லூரி சேர்ந்தப்பின் தான் தெரிந்தது நான் படிப்பதற்கும் நிலாவுக்கு சம்பந்தம் இல்லை என்று. என் அப்பா எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் நான் இயக்குநராக மாற பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. ஸ்டார் படம் நான் என் அப்பாவை மனதில் வைத்து எடுத்தது தான்." என்று அவர் கூறினார்.

முதல் படம் டிராப்

"நான் கல்லூரி படிக்கும் போதே முதல் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் . ஃபாக்ஸ் ஸ்டார் தமிழில் தொடங்கிய போது இரண்டு படங்களை அறிவித்தார்கள். ஒன்று ராஜா ராணி மற்றொன்று என்னுடைய கதை . நான் இயக்கியிருந்த 40 நிமிடம் குறும்படம் ஒன்றை பார்த்து என்னை தேர்வு செய்தார்கள். ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப் பட்டது. இந்த படம் கைவிடப் பட்டதும் நான் ஒரு த்ரில்லர் கதை எழுதி அதை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமாக சென்று கதை சொல்லத் தொடங்கினேன்.
த்ரில்லர் கதை என்றதும் எல்லா தயாரிப்பளர்களும் மறுத்துவிட்டார்கள்.

அந்த ஒருவருடம் முழுவதும் நான் எல்லா கதை சொன்ன எல்லா தயாரிப்பாளர்களும் கதையை நிராகரித்துவிட்டார்கள். சரி அவர்கள் கேட்கும் கதையை எழுதலாம் என்று முடிவு செய்து அடுத்த பத்து நாட்களில் ஒரு ஃபேண்டஸி காதல் கதையை எழுதிவந்தேன். ஒரு முதல்பட இயக்குநருக்கு ஃபேண்டஸி படத்திற்கான பட்ஜட் கொடுக்க மாட்டார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை . இந்த கதை யை கேட்ட எல்லா முன்னணி நடிகைகளும் தங்களுக்கு கதை பிடித்து நடிக்கவும் சம்மதித்தார்கள். ஆனால் இந்தப் படத்திற்கான பட்ஜட்டை யாரும் என்னை நம்பி தர முன்வரவில்லை .

இதற்கு பிறகு கிரகணம் என்கிற ஒரு கதையை எழுதி அந்த படம் படப்பிடிப்பும் முடிந்தது ஆனால் படம் வெளியாகவில்லை . இந்த கிரகணம் படத்தின் டிரைலரை பார்த்த யுவன் ஷங்கர் ராஜா தான் தயாரிக்க இருந்த முதல் படத்திற்கான கதையை என்னிடம் கேட்டார். அப்போதுதான் பியார் பிரெமா காதல் தொடங்கியது." என்று இளன் கூறினார்.