சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவா அண்ணன், நம்ம வீட்டு பையன் என செல்லமாக கொண்டாடும் சிவகார்த்திகேயனின் 39வது பிறந்தநாள் இன்று.
விஜய் டிவியில் துவங்கிய பயணம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கே வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்து செலக்டான அந்த தருணத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் வெற்றியின் முதல் படியில் அடி எடுத்து வைத்தார். போட்டியாளராக இருந்து தொகுப்பாளரானார். பல ரியாலிட்டி ஷோ, அவார்டு ஷோ என தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு மெரினா, 3 படம் மூலம் சினிமா பயணத்தை இனிதே துவங்கினார்.
வாய்ப்பை வெற்றியாக்கிய எஸ்.கே :
மெல்ல மெல்ல அவரின் நடிப்பு திறன் வெளிப்பட அதை தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டனர். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என படிப்படியாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டார். பெரிய பட்ஜெட் படங்கள் வந்து குவியும் அளவுக்கு உயர துவங்கினார். கனா, டான், டாக்டர் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் செய்யும் அளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து திக்குமுக்காட வைத்தார்.
அசுர வளர்ச்சி :
தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் பயணித்து வந்த பாதை வெகு தூரம் என்றாலும் அதை அவர் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே எட்டிவிட்டார். இந்த ஆண்டு துவக்கமே சிவகார்த்திகேயனுக்கு சரவெடி பொங்கலாக ‘அயலான்’ அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படம், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் என படு பிஸியாக சுழன்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அடுத்த விஜய் :
இடைப்பட்ட காலத்தில் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தூணில் அடிபட்ட பந்தை போல மிகவும் வேகமாக பவுன்ஸ் பேக் செய்து கலக்கி வருகிறார். சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவது எஸ்.கேவின் தனிச்சிறப்பு. நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருக்கும் நிலையில் அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பிறந்தநாளில் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.
மேலும் காண