குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கேரக்டரில் சாந்தனுவும் நடித்துள்ளனர்.
இந்த படம் முன்னதாக பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இன்று ரிலீசாகியுள்ளது. மேலும் இப்படத்தின்போது தான் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலிக்க தொடங்கி படம் வெளிவருவதற்குள் கல்யாணம் செய்து கொண்டனர். தம்பதிகளாக அவர்களின் முதல் படம் வெளியாகவுள்ளதும் ப்ளூ ஸ்டார் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணங்களில் ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் சாந்தனு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் நடித்த சக்கரகட்டி படம் முதல் ப்ளூ ஸ்டார் படம் வரையிலான இந்த சினிமா பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இது எனக்கு பல்வேறு விதமான உணர்வுகளை எனக்கு கொடுத்துள்ளது. மேலும் வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்போதும் பாசிட்டிவிட்டி மட்டும் தான். ப்ளூ ஸ்டார் உங்க வீட்டு பசங்க ஜெய்க்கிற படம். இன்று முதல் தியேட்டரில் வெளியாகிறது. கண்டிப்பாக பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும். ஜெய்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
My journey from #Sakkarakatti to #Bluestar… a journey that has taught me so many lessons, a rollercoaster of emotions & unforgettable memories which I’m thankful for in life 🫶🏻Only Positivity here onwards ❤️Unga veetu pasanga jeikre padam dhan #Bluestar 💙💫WORLDWIDE from… pic.twitter.com/TuYUnOq9Pb
— Shanthnu (@imKBRshanthnu) January 25, 2024
வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனு
இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு அவரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சாந்தனு. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக, வானம் கொட்டட்டும் என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி என்பது அமையவே இல்லை. விஜய் நடித்த மாஸ்டர் படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என மிகவும் எதிர்பார்த்த அவருக்கு, படத்தின் நீளம் காரணமாக சாந்தனு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தார். இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு தனக்கு நல்ல ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் ப்ளூ ஸ்டார் படத்தை எதிர்நோக்கியுள்ளார்.