நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் கடந்த 20 வருடங்களாக தன் மீதான அந்த எண்ணத்தை அவர் படிப்படியாக மாற்றி வருகிறார். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். உண்மையில் அந்த நிகழ்ச்சியில் ஷகீலாவின் கடந்த கால எண்ணங்களை எல்லாம் மாற்றி போட்டு விட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களின் அறியப்படாத பக்கங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் கேள்வி கேட்கும் அந்த நிகழ்ச்சியும் ஷகீலாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவர் மீது, வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ஷகீலா, தனது சகோதரர் மறைந்து விட்ட காரணத்தால் அவரது மகள் ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதனிடையே நேற்று மாலை ஷகீலாவுக்கும், ஷீத்தலுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஷீத்தல் ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது வழக்கறிஞர் சௌந்தர்யாவுக்கு போன் செய்து விவரத்தை ஷகீலா கூறியதும், சமாதானம் பேச வழக்கறிஞர் வந்துள்ளார். முதலில் ஷீத்தலிடம் சமாதனமாக செல்லலாம் என போனில் பேசிய வழக்கறிஞர் சௌந்தர்யா அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு தனது தாய் சசி, சகோதரி ஜமீலாவுடன் வந்த ஷீத்தல் ஆகியோரிடம் வழக்கறிஞர் சௌந்தர்யா சமாதானம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிகரெட் அணைக்கும் ட்ரேவை எடுத்து வழக்கறிஞர் தலையில் ஷீத்தல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் தாயார் சசி சௌந்தர்யாவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஷகீலாவுக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டலும் விடுத்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யா கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தன் மீதான தாக்குதல் குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஷகீலா மற்றும் ஷீத்தல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.