கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையின் அடிப்படையில் சரண்யா பொன்வண்ணன் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

சரண்யா பொன்வண்ணன்

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். ஹீரோ, ஹீரோயின் அம்மா என பல கதாபாத்திரங்களில், பல படங்களில் நடித்துள்ளார். அம்மா கேரக்டர் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான் என்கிற அளவுக்கு தனது நடிப்பால் மக்களை ஈர்த்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் மீது புகார்

சாதுவான, குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் அவர்களுடன் சேர்ந்து குழந்தைத்தனங்களை செய்யும் சரண்யா பொன்வண்ணன் மீது கடந்த மார்ச் 31ஆம் தேதி சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையளத்தில் புகாரளிக்கப்பட்டது. தனது பக்கத்து வீட்டுக்காரரான ஸ்ரீதேவி என்பவருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக இந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. கார் பார்க்கிங் செய்தபோது சரண்யாவின் காரை இடிப்பது போல் சென்றுவிட்டதால் தன் வீடு புகுந்து சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரளித்த ஸ்ரீதேவி தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து “படங்களில் சாதுவாக நடித்த இவரா கொலை மிரட்டல் விடுத்தார்” என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் துறையினர் சரண்யா பொன்வண்ணன் தரப்பை விசாரித்து இந்த சர்ச்சைக்கு பின் இருக்கும் உண்மையை தெரிவித்துள்ளார்கள்.

கார் பார்க்கிங் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனை

சென்னை, விருகம்பாக்கத்தில் தனது கணவர் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன். அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஸ்ரீதேவி சரண்யா வீட்டாரிடமும் அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் மற்ற குடும்பத்தினருடனும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபடுபவராக இருந்திருக்கிறார். கடந்த மார்ச் 31ஆம் தேதி சரண்யாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சரண்யா வீட்டின் முன் காரை நிறுத்தி இருக்கிறார்கள்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் அந்தக் காரில் இடிக்கும்படியாக தனது வீட்டின் கேட்டை திறந்துள்ளார். "ஏன் இப்படி பன்றீங்க’ என்று சரண்யாவின் மகள் கேட்டதற்கு "என் வீடு அப்படிதான் பண்ணுவேன்" என்று அவர் கூறியுள்ளார். பேச்சு வாக்குவாதமாக வீட்டிற்குள்ளே இருந்து வந்த ஸ்ரீதேவி சரண்யாவின் உறவினரை "வாடா போடா" என்று பேசியதோடு தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார்.

சத்தம் கேட்டு நடிகை சரண்யா மற்றும் அவரது கணவர் பொன்வண்ணன் வெளியே வந்து “ஏன் அடிக்கடி பிரச்னை பண்றீங்க?" என்று கேட்டுவிட்டு உறவினரை அழைத்து வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். அவர்கள் பேசிய சிசிடிவி காட்சியை ஆதாரமாக எடுத்துக் கொண்டு தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக சரண்யா மீது புகாரளித்துள்ளார் ஸ்ரீதேவி.

இந்தப் புகாரை விசாரணை செய்த காவலர் கண்ணன் ஸ்ரீதேவி தரப்பில் தப்பு இருப்பதை தெரிந்துகொண்டு தற்போது அவருக்கு எச்சரிக்கை கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.