S.A.Chandrasekhar Indirectly Attacked Director Lokesh Kanagaraj In Desingu Raja 2 | S.A. Chandrasekhar: இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா?

விமர்சனங்களை தாங்கி கொள்ளும் தைரியம் இக்கால இயக்குநர்களுக்கு இல்லை என நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
தேசிங்கு ராஜா 2
கடந்த 2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி, சூரி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “தேசிங்கு ராஜா”. டி.இமான் இசையமைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதிலும் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடிக்கிறது. 
இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்கால படங்கள் குறித்து சரமாரியாக விமர்சித்தார். 
எஸ்.ஏ.சி. கடும் விமர்சனம்
”கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மாலையில் நடக்கும் எந்த விழாக்களிலும் நான் கலந்து கொள்வது கிடையாது. காரணம், நான் என்னுடைய கடைசிக்காலத்தில் குறிக்கோளுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படத்தின் இயக்குநர் எழில் அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. அதனால் ஷூட்டிங்கில் இருந்த நான் அதை சீக்கிரம் முடிக்க சொல்லிவிட்டு வந்துவிட்டேன். 
அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெற்றி, தோல்வி எதிலும் சரி எழில் ஒரே மாதிரியாக பழகக்கூடிய நபராக தான் உள்ளார். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என சொன்னால், கதைக்கரு நன்றாக இருக்க வேண்டும். அதில் யார் நடிச்சாலும் வெற்றி பெறும் என்கிற அளவுக்கு திரைக்கதை அமைக்க வேண்டும். அப்படித்தான் எழிலை ஆர்.பி.சௌத்ரி என்னிடம் அறிமுகம் செய்தார். 
இயக்குநர்களிடம் பக்குவம் இல்லை 
மற்றவர்கள் எல்லாம் என்னை பற்றி ஆயிரம் சொல்வார்கள். நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பாவாக கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண ரசிகனாக கேட்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவேன். ஆனால் இப்ப திரைக்கதைக்கு எல்லாம் யாரும் மரியாதை கொடுக்கிறது இல்லை. ஹீரோ கிடைச்சா போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறாங்க. ஏன் என கேட்டால், ஆடியன்ஸ் ஹீரோவுக்காக எல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கதை எல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. 
ஹீரோவுக்காக படம் ஓடுகிறது. இதனால் அந்த இயக்குநர் பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறார். நான் மனதில் பட்டதை சொல்கிறேன். இதே படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருக்கும்போது பெரிய வெற்றி கிடைக்கும் என சொல்ல வருகிறேன். சமீபத்தில் நான் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி படம் ரிலீசாவதற்கு 5 நாட்கள் முன்னாடியே பார்த்தேன். பின்னர் அப்படத்தின் இயக்குநருக்கு போன் செய்து, முதல் பாதி சூப்பர் என சொன்னேன். 
ஆனால் இரண்டாம் பாதி சரியில்லை என சொல்லவும் அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அப்படத்தின் இயக்குநர் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்,அப்புறம் பேசுகிறேன் என சொல்லி போனை வைத்துவிட்டார். திரும்ப அழைக்கவே இல்லை.  அப்படத்தில் சொல்லப்பட்ட மத நம்பிக்கை மற்றும் அப்பாவே மகனை கொல்ல நினைப்பது போன்றவை எல்லாம் நடக்காத செயல் என சொன்னேன். அந்த படம் ரிலீசுக்குப் பிறகு அதனை எல்லாரும் வச்சு செய்தார்கள். நான் சொன்னதைக் கேட்டு 5 நாட்கள் முன்னரே மாற்றியிருக்கலாம். அவர்களுக்கு நான் சொன்ன விமர்சனத்தை தாங்கி கொள்ளும் தைரியம் இல்ல, பக்குவம் இல்ல” என விமர்சித்துள்ளார். 
லியோ படத்தை சொல்கிறாரா? 
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுவதை பார்க்கும்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜை விமர்சிக்கிறார் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்தாண்டு விஜய் – லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்தின் இரண்டாம் பாதி கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதில் மூட நம்பிக்கையால் அப்பாவே பிள்ளைகளை கொல்ல நினைப்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார் லோகேஷ். இதை குறிப்பிட்டு பட்டும் படாமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார் என அவரின் வீடியோ வைரலாகியுள்ளது. 

Source link