என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என ராஷ்மிகா நடித்த படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை படைத்து வருகின்றன. இப்படியான நிலையில் ஒரு நடிகையாக தனது வெற்றி குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேசியுள்ளார்.

என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்

வெற்றியை தான் எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்று ராஷ்மிகா மந்தனா இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதனை விளக்கிய அவர் ‘என்னை விட திறமையான அழகான எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்குதான் கிடைத்திருக்கிறது. அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த சில ஆண்டுகளில் நான் இதைதான் உணர்ந்திருக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

விமர்சனங்களை எதிர்கொள்வது

கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்திற்காக அவர் இணையதளத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப் பட்டார். அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுகுறித்து அவர் மற்றொரு நேர்காணலில் பேசியபோது ‘அனிமல் படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு காட்சி 9 நிமிடம் நீளமுடையது. அந்த காட்சியை நான் நடித்து முடித்தபோது செட்டில் இருந்த அனைவரும் என்னை பாராட்டினார்கள். ஆனால் அனிமல் படத்தின் டிரைலர் வெளியானபோது அதில் இருந்த 10 நொடியைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் என்னை ட்ரோல் செய்தார்கள். செட்டில் இருந்த எல்லாருக்கும் என்னுடைய நடிப்பு பிடித்திருந்தது ஆனால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. உண்மையில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் அவர்களுடன் உரையாடி தெரிந்துகொள்ள நினைக்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது