Rajkiran foster daughter Zeenat Priya has shared a emotional video about her separation from actor Munish Raja


 
தமிழ் சினிமாவின் மிகவும் கம்பீரமான நடிகர் என கொண்டாடப்படும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, கடந்த 2022 ஆண்டு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. தற்போது உணர்ச்சிவசப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. 
பேஸ்புக் மூலம் ஜீனத் பிரியா மற்றும் முனீஷ் ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. முனீஷ் ராஜாவின் குடும்பத்தினர் அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், ராஜ்கிரண் குடும்பம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த போதிலும் அவர்களை எதிர்த்து முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார் ஜீனத் பிரியா. இதனால் வீட்டை விட்டு வெளியேறினார் ஜீனத் பிரியா. 
 

மேலும் திருமணம் செய்து கொண்ட பிறகு பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் வகையில் தன்னுடைய வளர்ப்பு தந்தை ராஜ்கிரண் மீது மோசமான குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜீனத் பிரியா. இது அவர்களுக்கு இடையே இருந்த உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. 
அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இனி ஜீனத் பிரியாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்றும் அவள் தன்னுடைய சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் முனீஷ் ராஜாவுக்கு, ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதற்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், அவரின் நற்பெயரை தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், பண பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது என்றும் குற்றம்சாட்டி இருந்தார். மாறி மாறி இது போன்ற சர்ச்சைகள் ஏற்படவே முனீஷ் ராஜா – ஜீனத் பிரியாவின் திருமண வாழ்க்கையை சுற்றி பிரச்சினை எழுந்தது. 
தற்போது ஜீனத் பிரியா மிகவும் எமோஷனலான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் முனீஷ் ராஜாவுடனான தன்னுடைய திருமண பந்தத்தை முறித்து கொண்டதை சமூக ஊடகங்களுக்கு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். 
 

“வணக்கம்… நான் பிரியா. ராஜ்கிரண் சார் வளர்ப்பு மகள். நான் 2022ம் ஆண்டு  சீரியல் நடிகர் முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அது உங்கள் அனைவருக்கும் மீடியா மூலம் தெரிந்து இருக்கும். இப்போது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. எங்க கல்யாணம் சட்டபூர்வமானது கிடையாது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். 
அது மட்டும் இல்ல இந்த கல்யாணம் பண்ணிகிட்டதால என்னோட டாடியை நான் ரொம்ப காயப்படுத்திவிட்டேன். ஒரு தடவை இரண்டு தடவை இல்ல, நிறைய தடவை நான் அவரை காயப்படுத்திட்டேன். நான் இவ்வளவு பண்ணியும் எனக்கு ஒரு பிரச்சினைன்னு வந்த அப்போ என்னை கைவிடாம சத்தியமா நின்னு காப்பாத்தினார். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சுருங்க டாடி. என்னை மன்னிச்சுருங்க…” என பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா.
 
 
 

மேலும் காண

Source link