Nayanthara Issue Statement On Annapoorani Movie Controversy Ram Meet Eater Controversy

Nayanthara Annapoorani: அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்னப்பூரணி – நயன்தாரா அறிக்கை:
ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.
Nayanthara Annapoorani Issue : அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

அன்னபூரணி திரைப்பட சர்ச்சை:
நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணியில் திரைபப்டத்தில் இடம்பெற்று இருந்த, ”ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டார், எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாது என சொல்லவில்லை” என்பது போன்ற வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதேபோன்று, கிளைமாக்ஸ் காட்சியிலும் பிராமணப் பெண்ணாக நடித்திருந்த நயன்தாரா, புர்கா அணிந்து தொழுது பிரியாணி சமைக்கும் வகையில் இருந்த காட்சிகளும் பேசுபொருளாகின. இதைதொடர்ந்து, அன்னபூரணி ஆண்டி இந்து திரைப்படம் என்றும், லவ் ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், நெட்ஃப்ளிஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தான், நயன்தாரா தனது தரப்பு விளக்கத்த கொடுத்ததோடு, வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
 

Source link