தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
பவதாரிணி மறைவு
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை முறைக்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் அவரது சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனது 47 வயதில் உயிரிழந்துள்ளது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.
இறுதி அஞ்சலி
இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் அவரது தந்தை இளையராஜாவின் வீட்டில் அரசியல் தலைவர்கள், திரை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அவருக்கு தங்களது அஞ்சலியை நேரடியாகவும் சமூக வலைதளம் வாயிலாகவும் செலுத்தினார்கள். இந்த தருணத்தில் மிகப்பெரும் சோகத்திற்கு உள்ளாகியிருக்கும் வெங்கட்பிரபு, கங்கை அமரன் , பிரேம் ஜி, வாசுகி, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மற்றும் இளையராஜா ஆகிய குடும்பத்தினருக்கு அனைவரும் தங்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
எனக்கு இசை கற்றுக் கொடுத்தது அக்கா தான்
பவதாரிணி பற்றிய பல்வேறு நினைவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தனது குழந்தை போன்ற குரலால் பல பாடல்களுக்கு உயிர்கொடுத்த அவர், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத தடம்பதித்துச் சென்றுள்ளார். பவதாரணியுடனாக தங்களது பல நினைவுகளை திரையுலகினரும் பகிர்ந்து வருகிறார்கள். இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பேசியுள்ள பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தனது தந்தை இசைஞானி என்று போற்றப்பட்டாலும், யுவன் ஷங்கர் ராஜா இசையை முறையாக கற்றவர் இல்லை. ஆனால் கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகிய இருவரும் முறையாக இசை பயின்றவர்கள். தனக்கு சுத்தமாக இசை தெரியாது என்றும், முதல்முறையாக தன் கையைப்பிடித்து பியாவோவில் வைத்து, தனக்கு அதை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர் தன் அக்கா பவதாரிணி தான் என்று யுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது காண்போரை உருகவைத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Life can be cruel sometimes Stay strong Yuvan @thisisysr #Bhavatharini #RIPBhavatharini 🕊️pic.twitter.com/cpUsdD8KWc
— Irfan ❤️ (@irfan12995) January 25, 2024
நல்லடக்கம்
பவதாரிணியின் உடம் சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இளையராஜா தனது மகளுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.