மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், உடனடியாக, தீயை அணைக்க அந்த கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க்கப்பல் திடீரென ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
இதனால், கப்பலில் இருந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். பலர் காயமடைந்த நிலையில், ஒரு மாலுமி மாயமானார். அவரை தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபக்கமாக சாய்ந்துள்ள கப்பலை, நேராக நிமர்த்தும் பணியிலும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
கப்பலை மீட்பதற்கும், வீரரை கண்டுபிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாகவும் தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பல் விபத்துக்குள்ளானதால் மும்பை கடற்படை தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.