hotspot movie director vignesh karthick about hotspot movie


மலையாளப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் அதே அளவு தமிழ் படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஹாட்ஸ்பாட்
திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) தற்போது இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நான்கு கதைகளைக் கொண்ட இந்தப் படம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.  இப்படம் கடந்த  மார்ச் 29 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது.
சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட் ட்ரெய்லர்
ஹாட்ஸ்பாட் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இப்படம் தொடர்பான பலவித சர்ச்சைகள் எழுந்தன. ஆபாச வார்த்தைகள் தொடங்கி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன. கூடுதலாக படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை குடும்ப ரசிகர்கள் தவிர்க்கும் மனப்பாண்மையை ஏற்படுத்தியது. ஆனால், ஹாட்ஸ்பாட் படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் படத்திற்கு குடும்ப ரசிகர்களின் கூட்டம் வரவில்லை. ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க ஊக்குவிக்கும் வகையில் படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இந்நிலையில், படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் பேரரசு படம் குறித்து பேசினார்கள்.
‘குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படத்திற்கு ஏ சான்றிதழ்’
ஹாட்ஸ்பாட் படம் குறித்து பேசிய இயக்குநர் பேரரசு “இன்றைய சூழலில் குழந்தைகள் அவர்களின் இயல்புகளுடன் இருக்க யாரும் அனுமதிப்பதில்லை. குழந்தைகள் குழந்தைகளாக இருந்தால் மட்டுமே நாம் அவர்களை ரசிக்க முடியும். 4 வயது குழந்தையை 40 வயதிற்குரிய முதிர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். செல்ஃபோன் இன்று குழந்தைகளை மட்டுமில்லை நம் குடும்பங்களையும் சீரழித்துவிட்டது. தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சொன்னப்போனால் இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் ஆனால் இதற்கு ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்” என்று பேரரசு கூறினார்.
‘படம் பிடிக்கலனா என்ன செருப்பால அடிங்க’
தொடர்ந்து தன் ஹாட்ஸ்பாட் படம் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் “ இப்போது எல்லாம் பெரிய ஸ்டார்களின் படங்களைத் தவிர சின்னப் படங்களுக்கு பெரிதாக முதல் நாள் வரவேற்பு இருப்பதில்லை. ஒரு வாரத்திற்கு அத்தனைப் படங்கள் வெளியாகின்றன. ஆனால் கூட்டம் வராததால் அந்தப் படங்கள் இரண்டு நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடுவதில்லை. இப்படியான சூழலில் படம் மீது கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் இந்தப் படத்தின் ட்ரெய்லரை அப்படி வெளியிட்டோம்.
ஆனால், உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரஸ்யமாக இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். படம் பார்த்த எல்லா தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்திருக்கின்றன என்றாலும், நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் படத்திற்கு வரவில்லை. ரசிகர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இந்தப் படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடித்துக் கொள்ளலாம்“ என்று அவர் கூறினார்.
 

மேலும் காண

Source link