Gemini Ganesan 19th death anniversary today


தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் ஒரு பக்கம் கொடி கட்டி பறக்க சைலண்டாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை  குறிப்பாக ரசிகைகள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வந்தார் நடிகர் ஜெமினி கணேசன். இந்த உலகை விட்டு அவரின் உயிர் பிரிந்தாலும் அவரின் திரைப்படங்கள் மூலம் என்றும் நினைவுகளில் ஊஞ்சலாடும் ஜெமினி கணேசன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று. 
 

1947ம் ஆண்டு வெளியான ‘மிஸ் மாலினி’ திரைப்படத்தில் முதல் முறையாக சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படியே படிப்படியாக உயர்ந்து ஆர்.எஸ்.மனோகர் ஹீரோவாக நடித்த ‘தாய் உள்ளம்’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். பின்னாளில் இந்த காம்போ அப்படியே தலைகீழாக மாறி ஜெமினி கணேசன் ஹீரோவாகவும் , ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும் அவரின் படத்தில் நடிக்கும் அளவுக்கு தன்னுடைய அந்தஸ்தை படிப்படியாக கடின உழைப்பால் பெற்றார். கணேஷ் என்ற அவரின் பெயர் ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததால் ஜெமினி கணேசன் என அடையாளப்பட்டார். 
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகள் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட படங்கள் 100 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அரசு அவரின் கலை சேவையை பாராட்டி கலைமாமணி பட்டம், பத்மஸ்ரீ விருது மற்றும் ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவித்தது. 
“மிஸ்ஸியம்மா” படத்தின் மூலம் இணைந்து நடித்த ஜெமினி கணேசன் – சாவித்திரி இடையே பழக்கம் ஏற்பட அது காதலாக மாறி 1955ம் ஆண்டு திருமணத்தில் கனிந்தது. சாவித்திரி மீது மிகுந்த அன்பும், பாசமும், காதலும் கொண்ட ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற காதல் ஜோடியாக திகழ்ந்தார்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கண்ணீருடன் பிரிந்தார்கள்.   
 

ஜெமினி கணேசன் கார் ஓட்டுவதில் திறமையானவர். அவரின் வேகத்துடன்  ஈடுகொடுக்க யாராலும் முடியாது. இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ஃபேவரட் நடிகர்களில் முக்கியமானவர் ஜெமினி கணேசன். அவரின் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த ஏராளமான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஜெமினி கணேசனுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் பின்னாளில் அவரின் பல படங்களில் இணைந்து நடித்திருந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், கார்த்திக், பிரபுதேவா, அர்ஜுன் என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 
திரைத்துறைக்கே தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் மார்ச் மாதம் 22ம் தேதி 2005ம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உடல் மட்டுமே இந்த உலகை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய காலத்தால் அழியாத கவியங்களால் என்றும் நிலைத்து இருப்பார். 

மேலும் காண

Source link