Comedian actor Seshu Passes Away his video viral in social media network | Seshu : ”சாப்பாட்டுக்கு கூட வழியில்ல” லொள்ளு சபா சேஷுவின் கடைசி பேச்சு


Seshu: பிரபல நகைக்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
காலமானார் சேஷு:
விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ.  இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.
2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி  என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார்.  குறிப்பாக, அண்மையில் வெளியான ‘வடக்குப்படி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 
இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
சேஷு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி:
இந்த நிலையில், கடைசியாக நடிகர் சேஷு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியல் இவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, “10 ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளேன். கஷ்டப்படுகிறவர்களுக்கு  உதவி செய்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி, இதேபோல கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவார்கள்.
எனக்கு கஷ்டப்படுபவர்களோட வலி தெரியும்.  நான் அதையெல்லாம் அனுபவித்தேன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கேன். என் வாழ்க்கையில் எல்லாம் கஷ்டங்களையும் சந்தித்தேன்” என்று உருக்கமாக பேசி உள்ளார்.  மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக சேஷு வீட்டில் இருந்த ரூ.2 மதிப்புள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஏரியாவில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் உதவியுள்ளதாவும் இந்த நிகழ்ச்சியல் நினைவூட்டியிருந்தார்.  திரையிலும், திரைக்குப் பின்னாலும் நகைச்சுவை கலைஞராக, நல்ல மனிதராக வலம் வந்தார் சேஷு. பல ஆண்டுகளாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த சேஷு, அண்மை காலத்தில் தான் இவருக்கு நகைக்சுவை நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது. இப்படியான சூழலில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க
Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5! இந்த முறை கோமாளிகள் இவர்கள்தானா? வெளியான அசத்தல் ப்ரோமோ!

மேலும் காண

Source link