பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் உலுக்கி எடுத்தவர் ‘ஆட்டம் பாம்’ மாயா. அவர் மட்டும் அந்த சீசனில் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு பரபரப்பாக இருந்து இருக்காது. அதே அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் சீசன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெறுப்பை சம்பாதித்த கண்டெஸ்டண்ட்டாகவும் மாயா உருவெடுத்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் இவற்றில் இருந்து விலகி, தன் சினிமா பயணத்தை பழையபடி தொடர்ந்து வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். அதைத் தொடர்ந்து மகளிர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம், லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் பல திரைப்பட வாய்ப்புகளை பெற்று கொடுத்துள்ளது.
அந்த வகையில் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் மாயா. நடிகர் ராம்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மாயா நடிக்க உள்ளார். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரப்பாகின.
நடிகர் ராம்ஸ் – மாயா கிருஷ்ணன் நடிக்கும் இப்படத்திற்கு ‘ஃபைட்டர் ராஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியீட்டில் கலந்து கொண்ட மாயா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் நீண்ட குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
“ஃபைட்டர் ராஜா படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவிற்கு கிடைத்த அபாரமான வரவேற்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் சிறந்த திரைக்கதை, ஆக்ஷன், காமெடி என அனைத்தின் கலவையாக மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகுந்த பாசத்துடனும் நம்பிக்கையுடனும் இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குகிறோம். பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் டோலிவுட்டின் மதிப்பிற்குரிய பிரபலங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
ஊடகம், மீடியா மற்றும் டோலிவுட் பிரபலங்கள் தங்களின் பிஸியான ஷெட்யூல் நடுவில் இந்த நிகழ்வில் தன்னலமின்றி கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் என்னுடைய நன்றிகளை யூடியூபர்கள், இன்ஃப்ளூவென்சர்கள், மற்றும் திரைக்குப் பின்னால் தன்னலமின்றி பங்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. நான் ஏற்கனவே பாராட்டினால் நிறைந்துள்ளேன். அறிமுகமாக இதை விட சிறந்த வழி என்னவாக இருக்க முடியும்? ” எனப் பதிவிட்டுள்ளார் மாயா கிருஷ்ணன்.
மாயாவின் இந்த போஸ்டுக்கு அவரின் ஆதரவாளர்கள் ஹார்ட்டின்களையும், கமெண்ட்களையும் பறக்கவிட்டு வருகிறார்கள்.
மேலும் காண