நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட பொன்னாடையை நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்த சம்பவத்தின் பின்னணியில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகியுள்ளது.
நூல் வெளியீட்டு விழாவில் சிவகுமார்:
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். கிட்டதட்ட இன்று அறிமுகமாகும் அனைத்து தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 82 வயதிலும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் சிவகுமார் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இத்தகைய சிவகுமாரின் பேச்சுக்கு மயங்காதவர்களே இல்லை. தன்னுடைய வாழ்க்கை அனுபவம் தொடங்கி தான் படித்த புத்தகங்களில் இருக்கும் கருத்துகள் வரை சிவகுமார் பேசினால் மேடையே எகிறும்.
இப்படியான நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொன்னாடையை வீசினாரா சிவகுமார்?
இந்நிகழ்ச்சியில் முடிவில் மேடையை விட்டு இறங்கிய சிவகுமாருக்கு வயதான ரசிகர் ஒருவர் பொன்னாடை அணிவித்து அவரை வரவேற்க முற்பட்டார். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த பொன்னாடையை வாங்கி கீழே தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கனவே சிவகுமார் கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தபோது அவரை இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் சிவகுமார் செல்போனை தட்டி விட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க தன் செயலால் மனம் வருத்தப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சிவகுமார் வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் காரைக்குடி நிகழ்ச்சியில் சிவகுமார் பொன்னாடையை தூக்கி எறிந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
உண்மையில் நடந்தது என்ன?
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ ஒன்றில் கீழ் Rifoy Jainulabideen என்ற நபர் பேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சிவகுமாருக்கு பொன்னாடை கொடுத்ததாக சொல்லப்பட்ட முதியவர் என்னுடைய தாத்தா தான். அவரும் சிவகுமாரும் 50 ஆண்டுகால நண்பர்கள். இந்த சம்பவம் வைரலான நிலையில் இதுதொடர்பாக நான் என் தாத்தாவிடம் பேசினேன். அவர் என்னிடம், ‘சிவகுமார் சும்மா ஃப்ரண்ட்லியாக எதுக்குடா இதெல்லாம் எனக்கு என கேட்டு விட்டு அந்த பொன்னாடையை தூக்கி எறிந்துவிட்டு வாடா போலாம்’ என கூப்பிட்டார். மேடையில் இருந்து கீழே இறங்கி வந்ததும் அந்த பொன்னாடையை இதை நீயே வச்சிக்கன்னு சொல்லி என் தாத்தாவிடம் கொடுத்து சென்றார்.
என் தாத்தா காரைக்குடியில் வசித்து வருகிறார். அந்த ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றில் பேச சிவகுமார் வந்தார். அவர் எங்க வீட்டு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார், எனவே தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்.
மேலும் காண