அயலான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘சூரோ சூரோ’ பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் புது முயற்சி

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் சினிமா தொடங்கி பாலிவுட் வரை ஏலியன் திரைப்படங்கள் பல வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழில் புதிய முயற்சியாக படம் முழுவதும் ஏலியனை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிறச்செய்துள்ளது.

மேலும் 2016ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் தற்போது முழுவீச்சுடன் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. குறிப்பாக தரமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதாக இப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் முன்னதாக தெரிவித்திருந்தார்.

மூன்றாவது சிங்கிள்

தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கெனவே இப்படத்தின் வேற லெவல் சகோ, அயலா அயலா ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் – ரகுல் ப்ரீத் சிங் இருவரும் தங்கள் கலக்கல் நடனத்துடன் ஏலியனை வரவேற்று போற்றி பாடும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாகும் நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 ஆகிய திரைப்படங்களும் பொங்கல் ரேஸில் போட்டியிட உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் அவருக்கு பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் நல்ல வசூலையும் குவித்தது. மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்து சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை பெற்றுத் தந்த மாவீரன் படத்தினைப் போல் இப்படமும் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், இதுவும் பெரும் வெற்றியை பெற்று தரும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.