திருப்பதி பட ஷூட்டிங்கில் நடிகர் அஜித் தன்னை மிரட்டியதாக நடிகை ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் “திருப்பதி”. இப்படத்தில் சதா, கஞ்சா கருப்பு, ரியாஸ் கான், ஹரிஷ் ராகவேந்திரா, அருண் பாண்டியன், லிவிங்ஸ்டன், ஆர்த்தி என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வழக்கம்போல இதில் சென்டிமென்ட் காட்சிகளை புகுத்தி பேரரசு ரசிகர்களை கவர வைத்தார்.

இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நடிகை ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “அஜித்துடன் நான் திருப்பதி என்ற படம் பண்னேன். அதில் என்னுடைய பிறந்தநாள் தொடர்பான காட்சி ஒன்று எடுத்தார்கள். என்னோட ஷூட்டிங்கிற்கு வந்த அம்மா கேரவனில் இருந்தார்கள். அதனுள் ஏசி அளவு அதிகமாக வைக்கப்பட்டிருந்தது. வெளியே வந்து தம்பி தம்பி என அங்கிருந்த ஆட்களை அழைத்துள்ளார்கள். அப்போது அந்த பக்கமாக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த அஜித் அதனை கவனித்து என்னவென்று விசாரித்துள்ளார்.

உடனே அவர் விஷயத்தை கேட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த வேலை செய்பவரை எழுப்பி ரிமோட் வாங்கி ஏசி அளவை சரியாக வைத்துக் கொடுத்துவிட்டு சென்றார். நேராக அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். நான் ஹாய் என சொன்னதும் அம்மா ஷூட்டிங்கிற்கு வந்துருக்காங்களா? என கேட்டார். நான் ஆமாம் என சொன்னதும், ‘நீ அடிக்கடி உதவியாளரை அனுப்பி அல்லது போன் பண்ணி அல்லது நேராக போய் அம்மாவை போய் பார்த்துட்டு இருக்கணும். குளிர்ல அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது. இல்லைன்னா கூட்டிட்டு வரக்கூடாது. நீ பொறுப்பா நடந்துக்கோ என சொல்லி மிரட்டினார். அது மிரட்டல் இல்லை அது அன்பா சொன்ன விஷயம். நான் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

இவர் ஒரு ஹீரோ நடிச்சா கேரவனுக்கு போய் உட்காரணும். பக்கத்து கேரவனில் சொல்றதை கேட்டு வந்து சொல்றாரேன்னு நினைச்சேன். அன்னைக்கு ஒருநாள் மட்டும் இல்லை. கிட்டதட்ட 6 நாட்கள் அப்படத்தின் ஷூட்டிங்கிற்கும் அம்மா வந்திருந்தார். எல்லா நாளும் போகும்போது கேரவனை தட்டி ‘அம்மா ஓகே வா?’ என கேட்பார். இதை அம்மா என்னிடம் சொல்வார். அதேபோல் கேரவன் அருகில் உட்கார்ந்திருப்பவர்கள் அஜித் வரும்போது மரியாதைக்கு எழுந்து நிற்பார்கள். ஆனால் இன்னொரு டைம் எழுந்தால் நான் இறங்கி வரமாட்டேன் என சொல்லுவார். என்ன மனுஷன்பா என அஜித் என்னை வியக்க வைத்தார்” என ஆர்த்தி அதில் பேசியிருப்பார்.