சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டியர் ட்ரெய்லர் ரிலீஸ்
இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும் நாயகன், இதனால் இவர்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்றது. அப்போது வாராவாரம் தன் படங்கள் ரிலீசாவது குறித்த விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்தார். தன் ரெபெல், கள்வன், டியர் என தொடர்ச்சியாக வெளியான 3 படங்களுமே கடும் உழைப்பில் வெளியானது என்றும், அனைத்து வேலைகளும் முடிந்து, வெவ்வேறு கட்டத்தில் படம்பிடிக்கப்பட்டு, தேதி முடிவாகி தற்போது வரிசையாக வெளியாவதாகப் பேசினார்.
‘என்னையும் இப்படி பேசுனாங்க..’
அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) பேசியதாவது: “இந்த ஆண்டில் என்னுடைய முதல் படம். இப்போ ஜி.விக்கு நடந்தது மாதிரி எனக்கும் போன வருஷம் நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகினு கூப்பிட்டு இருக்காங்க. அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். அது நம்ம கையில் இல்லை. கள்வன் படத்திற்காக ஜி.விக்கு வாழ்த்துகள்.
டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் எல்லாருக்குமே தனித்துவமான கதாபாத்திரம். இளவரசு, ரோகிணி மேடம், கீதா மேடம் எல்லாருக்குமே நல்ல கதாபாத்திரம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை மிகவும் அழகாக அவர் காட்டியுள்ளார்.
‘ஜி.வி – பவானியின் அண்ணன் – தங்கை பாசம்’
இந்தப்படத்தின் ஷூட்டிங்கே கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதை ரசித்துக் கேட்பேன். அவர் அவ்வளவு புத்திசாலியான ஒருவர். இளவரசு சாரும் அப்படி தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப் படத்துக்காக 3 ஆண்டுகளாக ட்ராவல் செய்துள்ளேன். இந்தப்படம் மூலம் இயக்குநர் ஆனந்த் முக்கியமான நண்பராகக் கிடைத்துள்ளார். ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். உங்கள் ரைட்டிங் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. அடுத்த படம் கண்டிப்பாக நாம் பண்ணலாம். வருண்! தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை எங்கள் அனைவருக்கும் டியராக மாற்றியுள்ளார். அவரது இசைக்கு நான் பெரிய ஃபேன். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. ஜி.வி தவிர வேறு ஒருவர் நடித்தால் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஜி.வியின் தங்கை பவானி, நான் அவருடன் இணைந்து க.பெ.ரணசிங்கம் படத்தில் நடிக்கும்போது ஜி.வி பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். அவர்கள் அன்பைப் பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
மேலும் காண