Actress Meena Talks About Avvai Shanmugi Shooting Spot Experience With Kamal Haasan | Actress Meena: ”நான் அழுதே விட்டேன்”

நடிகர் கமல்ஹாசனுடன் முத்தக்காட்சி என்றதும் தான் அழுதுவிட்டதாக நேர்காணல் ஒன்றில் மீனா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. 
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் மீனா. ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், சரத்குமார் என அன்றைய காலக்கட்டத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கண்ணழகி என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்ட மீனாவின் மகள் நைனிகாவும் தமிழில் விஜய்  நடித்த தெறி, அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
அதேசமயம் மீனா தனது கணவர் வித்யாசாகர் மறைவுக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்து பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனிடையே அவர் அளித்த நேர்காணல்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசனுடனான முத்தக்காட்சி பற்றி பேசியுள்ளார். 
1996 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘அவ்வை சண்முகி’. இந்த படத்தில் தான் கமல் – மீனா ஜோடி முதல்முறையாக இணைந்தனர். இந்த படம் எப்போது பார்த்தாலும் சிரிப்பலையை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். 
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவத்தை தான் மீனா அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.  அதாவது, “கமல்ஹாசன் படம் என்றாலே லிப் டூ லிப் முத்தக்காட்சி இருக்கும் என்பதால் முதலிலேயே நான் தயாராகி விட்டேன். அவ்வை சண்முகி படம் ஒத்துக் கொள்ளும் போது பல விஷயங்கள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, இது சுத்தமாக நியாபகம் இல்லை. இரண்டாம் நாள் ஷூட்டிங்கில் என்கிட்ட உதவி இயக்குநர் ஒருவர் முத்தக்காட்சி பற்றி சொன்னார். எனக்கு அப்படியே பதற்றமாகி விட்டது. இதை எப்படி நான் பண்ண முடியும்? சௌகரியமாக இருக்காது. அம்மா நீங்க தான் இயக்குநரிடம் சொல்ல வேண்டும் என சொல்லிவிட்டேன். 
அவரும் எப்படி இயக்குநரிடம் சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்போதே ஷாட் ரெடி என சொல்லிவிட்டார்கள். எனக்கு அழுகையே வந்துவிட்டது. அங்கே போனால் என்னிடம் நீங்கள் கீழே படுத்து கொண்டிருப்பீர்கள் என காட்சியை விளக்கி கொண்டிருந்தார்கள். அப்ப கமல் என்னிடம் நான் கிட்ட வர, ‘இந்த ஒரு தடவை வேண்டாமே’ என டயலாக் வரும் என சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது” என மீனா அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். பின் கமல்ஹாசன் நடித்த தெனாலி படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

Source link