நெப்போடிசம் உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக பணம் அதிகம் புழங்கும் அரசியல் மற்றும் சினிமாவில்தான். இதனாலே இந்த இரண்டு துறைகளிலும் நெப்போடிசம் எப்போதும் ஓங்கே இருக்கின்றது. இந்திய அரசியலில் நெப்போடிசத்தை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் இறுதியில் நெப்போடிசத்திற்கு இரையாகிப்போன வரலாறு தொடங்கி கண் முன் வாழும் சாட்சியங்கள் வரை உள்ளனர்.
அதேபோல் சினிமாவில் நெப்போடிசம் என்பதும் பல நல்ல நடிகர்களை சினிமாவில் இருந்து வெளியேற்றி அவர்களை தற்கொலைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் என்றால், பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வந்த நாயகன் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நெப்போடிசம்தான். ஹிந்தி சினிமா முழுக்க முழுக்க கான்கள் மற்றும் கபூர்களின் கரங்களில் இருந்தது, இருக்கின்றது. இவர்களுக்கு அடுத்து இந்த சினிமா இவர்களின் வாரிசுகள் வசம் வரவேண்டும் என்ற நிலையை ஆதிக்கம் செலுத்திவரும் கான்களும், கபூர்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் மிகத் திறமையான நடிகர். இவர் நடித்த பல படங்கள் பாலிவுட்டில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் கொடுத்த படம் என்றால் அது எம்.எஸ். தோனி அண்டோல்டு ஸ்டோரி படம்தான். இந்த படத்தில் தோனியாகவே வாழ்ந்திருந்தார் சுஷாந்த். ரசிகர்களை தோனியின் அருகில் அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், தோனியை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கம் ஆக்கியது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பு. இவரது தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் இது தற்கொலையே இல்லை கொலை என பலரும் இன்று வரை பொதுவெளியில் கூறிவருகின்றனர்.
வட இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா மட்டும்தான் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், தென்னிந்திய சினிமாக்கள் தமிழ் சினிமா, மலையாள சினிமா, கன்னட சினிமா மற்றும் தெலுங்கு சினிமா எனவகைப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தென்னிந்தியாவில் நெப்போடிசத்தினால் ஒரு நடிகர் தற்கொலை செய்துள்ளார் என்று கூறினால் நம்புவீர்களா? ஆமாம்.
தெலுங்கு சினிமாவில் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தி வருவது, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், என்.டி.ஆர் மற்றும் தில் ராஜூ குடும்பங்களின் கரங்களில் உள்ளது. இவர்கள் கண் அசைவில்தான் அனைத்துமே நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஆதிக்கத்திற்கு மத்தியில், சித்திரம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் உதய் கிரண். இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாதவர். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, தெலுங்கு சினிமாவே திரும்பிப் பார்த்தது. இதனால் இவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க சிரஞ்சீவி முடிவெடுக்கின்றார். ஆனால் இந்த திருமணத்திற்கு பின்னால் இருக்கும் சூழ்ற்சியை தெரிந்து கொண்ட உதய் கிரண், திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் நிறுத்துகின்றார்.
இதன் பின்னர் இவரை தெலுங்கு சினிமா உலகம் ஓரம் கட்டியது. இதனால் இவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களே அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கொண்டனர். இப்படியான நிலையில், உதய் கிரண் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய அவரது 101வது மற்றும் கடைசி தமிழ் திரைப்படமான பொய் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் காண