Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். 
விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் 
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே அவர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதற்கு சாட்சி. 
இப்படியான நிலையில் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 
ராஜ்கிரண் பேச்சு 
அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, “என் தம்பி விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர். அவருக்கு சூழ்ச்சிகள் தெரியாது. விஜயகாந்த் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார். அரசியல் தான் அவரை காவு வாங்கி விட்டது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்ட காலம் முதல் இறக்கும் வரை எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பார் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அந்த வேதனைகள் பேசி தீராது. அந்த நல்ல மனம் இறைவன் நிழலில் சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார். 
நடிகை ரேகா நெகிழ்ச்சி பேச்சு 
நடிகை ரேகா பேசும்போது, ‘எப்படி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இருக்கும்போது நடிச்சிருக்கோம் என்பதைப் போல விஜயகாந்த் இருக்கும் போது நடிச்சிருக்கேன் என நினைக்கையில் ரொம்ப பெருமையா இருக்கு. அவருடன் நான் 5,6 படங்களில் நடித்துள்ளேன். ரொம்ப நல்ல மனிதர். வெள்ளை ஆடை அணிந்து வந்தால் அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். ஒரு காந்த பார்வை விஜயகாந்திடம் இருக்கும். சொல்வதெல்லாம் உண்மை படத்தில் நடிக்கும்போது அதில் குதிரை செல்லும் காட்சி இருந்தது. எனக்கு குதிரையேற்றமே தெரியாது. ஆனால் அவர் என்னை ஏற்றி விட்டு குதிரையை ஓட விட்டார். சார் காப்பாத்துங்க என சொன்னதும், இப்படித்தான் கத்துக்க முடியும் என சொன்னார். 
அவருடைய தம்பி தங்க கம்பி, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படத்தில் நடிக்க ரொம்ப தைரியம் கொடுத்தார். நல்ல நடி ரேகா என ஊக்கம் கொடுப்பார். விஜயகாந்துடன் நடிப்பதற்கு பெருமையா இருந்தது. எனது தந்தை, எம்ஜிஆர் இறப்புக்கு பின்னால் நான் அழுதது விஜயகாந்த் இறப்புக்கு தான் அழுதேன். விஜயகாந்த் நடிகனாக, அரசியல்வாதியா ஜெயிச்சிட்டாரு. ஆனால் உடல் ஆரோக்கியத்துல தோத்துட்டாரு. அதனால் எல்லாரும் ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க” என கூறினார். 

மேலும் படிக்க: Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

Source link